அற்புதத் தெய்வம் - ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரா் ஆலயம்oddusuddansivankovil ஒட்டுசுட்டான் தாந்தோன்றீஸ்வரம்
Headlines News :
Home » » அற்புதத் தெய்வம்

அற்புதத் தெய்வம்

Written By Admin on Thursday 13 September 2012 | 22:59


வன்னி பெருநிலப்பரப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில அமைந்துள்ள ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரம் புகழ்பெற்ற ஆலயமாகும் . யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள இடைக்காடு என்னும் ஊரைச் சேர்ந்த வீரபத்திரர் என்ற சைவ வேளாளர் தம் பிள்ளைகள் இருவருடன் வன்னிக்குச் சென்று குடியேறினார் . ஒட்டுசுட்டானில் அவர்கள் வாழ்ந்த இடம் இன்றும் இடைக்காடு என்றே அழைக்கப்படுகின்றது . அவர் அவ்விடத்தில் காடு வெட்டிக் குரக்கன் பயிரிட்டார் . குரக்கன் கதிர்களைக் கொய்த பின்னர் அவ்விடத்தை தீயிட்டு எரித்தார் . அப்பொழுது கொன்றை மரம் ஒன்றின் கீழ் பகுதி எரியாதிருந்தமை கண்டு அவர் ஆராய்ந்த பொழுது சிவனின் திருவருளால் அக்கொன்றை மரத்தின் கீழே சிவலிங்கம் ஒன்று கண்ணுக்கு தென்பட்டது . அதுவே அன்று தொட்டு இன்றுவரை இக்கோயிலின் கருவறையிலுள்ள சிவலிங்கமாக விளங்குக ின்றது .
வன்னியை ஆண்ட சிற்றரசன் ஒருவன் முதலில் இதற்குக் கோயில் கட்டுவித்தான் பல பெரிய கோயில்களைக் கட்டுவதில் ஈடுபட்ட குளக்கோட்ட மன்னனும் , இக் கோயிலுக்குத் திருப்பணி செய்வித்தான் என்பதனால் இம்மூர்த்தியின் கீர்த்தி எத்தகையது என்பது புலப்படும் . இது தானாகவே தோன்றிய இலிங்கம் . மூர்த்தியின் மகிமை காரணமாகவே அது தானாகத் தோன்றுகின்றது இத்தகைய மூர்த்தி சுயம்பு இலிங்கம் எனப்படும் சிற்பி செய்கின்ற சிவலிங்கத்துக்கு உருத்திர பாகம் விஷ்ணு பாகம் பிரம பாகம் என மூன்று பிரிவுகளைக் கொண்ட சிவலிங்கம் வேறாகவும் ஆவுடையார் என்பது வேறாகவும் இருக்கும் . சுயம்பு இலிங்கத்துக்கு இந்த வரையறைகள் இல்லை என்பதனால் ஆவுடையார் பகுதியும் இல்லை இது இல்லாதிருத்தல் தவறு எனக்கருதிய கோயில் நிர்வாகி இந்தியாவைலிருந்து சிற்பி ஒருவரை வரவழைத்து ஆவுடையார் பகுதியைச் செய்வித்தார் . அத்துடன் இயற்கையாக அமைந்த இந்தச் சிவலிங்கத்தை அழகுபடுத்த வேண்டும் என்றெண்ணி அதனை மூடுவதற்குப் பொற்கவசம் ஒன்றுஞ் செய்விக்கப்பட்டது . எனினும் இவை இரண்டும் தமக்குத் தேவையில்லை என்பதனைத் தாந்தோன்றீஸ்வரர் தம் அருட் குறிப்பாற் கோயில் அதிகாரிக்குத் தெரிவித்தார் . இந்த நிகழ்ச்சியும் அந்த மூர்த்தியின் அளப்பரிய அருளாற்றலை வெளிப்படுத்துகின்றது . பொற் கவசம் இன்னமும் கோயிலில் இருக்கின்றது .
இவை எல்லாவற்றிற்கும் மேலாக இக்கோயில் இயற்கையாகவும் செயற்கையாகவும் உண்டாகின்ற அனர்த்தங்களினாற் பாதிக்கப்படாமல் இருப்பதும் இந்த மூர்த்தியின் அற்புதச் செயலாகும் . சுயம்பு லிங்கம் எப்பொழுது தோன்றியது எனக் கூறமுடியாது . எக்காலத்தில் இருந்து மக்கள் இதனை வழிபடத் தொடங்கினர் என்பதனை மட்டுமே கூற முடியும் இது சுயம்புலிங்க மூர்த்தியின் தனிச் சிறப்பாகும் . இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவன் பெயர் ஒட்டுசுட்டான் தந்தோன்றியீச்சரர் எரித்த குரக்கன் ஒட்டுவேகவில்லை என்பதனால் வேகாவனமுடையார் என்னும் காரணப் பெயரும் இவருக்கு வழங்குகின்றது . இறைவி பெயர் பூலோக நாயகி இக்கோயிலின் தல விருட்சம் கொன்றை .


தலச் சிறப்பு

இது அடர்ந்த காட்டுப்பகுதியில் அமைந்துள்ள தலமாகும் எனவே இங்கு மக்கள் அதிகமில்லை . இந்தத் தலத்தின் மகிமை காரணமாக ஆதியில் மக்கள் இங்கு குடியிருக்கத் தொடங்கியிருப்பார்கள் . தாந்தோன்றியீச்சரை நம்பி அங்கு குடியேறுபவர்களுக்கு வசதி செய்து கொடுப்பதற்காக இற்றைக்கு ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு முன் அங்கு குளம் ஒன்று கட்டுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது . அப்பொழுது கோயிலை அடுத்துள்ள காட்டுப் பகுதியிற் பாழடைந்த நிலையில் முத்துராயன் கட்டுக்குளம் இறைவன் சித்தமாகக் கண்டு பிடிக்கப்பட்டது . அது இப்பொழுது திருத்தி அமைக்கப்பட்டுள்ளது . இக்குளம் அத்தலத்தைச் செழிப்பாக்கியமையும் அந்தத் தலத்தின் சிறப்பாகும் . இத்தலத்திற் தேவர் பதி என்னும் பெயரும் வழங்குகின்றது . தேவர்கள் வாழும் இடம் என இப்பெயர் பொருள் தருதலும் இத்தலத்தின் சிறப்பினையே எடுத்து விளக்குகின்றது .
இனி தீர்த்தச் சிறப்பை எடுத்துநோக்குவோமாயின் இந்தக் கோயிலுக்கு இயற்கையாய் அமைந்த அற்புதமான தீர்த்தக் குளம் ஒன்று உள்ளது . தீராத நோய் உள்ளவர்கள் இக்கோயிலுக்கு நேர்த்திக்கடன் செய்வார்கள் . அந்த நேர்த்திக் கடனை நிறைவு செய்து இந்தத் தீர்த்தக் குளத்தில் நீராடிய பின்னர் அவர்களுடைய நோய் தீர்ந்து விடும் . இது இத்தீர்த்தத்தின் மகிமையை எடுத்தியம்புகின்றது . இதற்கு மாறாக இந்தத் தீர்த்தக்குளத்தை அசுத்தப்படுத்த எண்ணுபவர்கள் இறைவனின் சீற்றத்திற்கு ஆளாதலும் கண்கூடு . இற்றைக்கு ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இக்கோயிலுக்குப் பூசை செய்ய நியமிக்கப்பட்ட பூசகர் இருவர் இந்தத் தீர்த்தத்தின் புனிதத் தன்மையைப் பேணாது இதனை பயன்படுத்த முயன்றனர் . அப்பொழுது தற்செயலாக அவ்விடத்துக்கு வந்த கோயில் நிர்வாகி அவர்களை தடுத்தும் பொருட்படுத்தவில்லை . அதனால் அவ்விருவரும் தீர்த்தக் குளத்தில் இருந்து உயிருடன் மீளவில்லை இந்நிகழ்ச்சி அந்தத் தீர்த்தத்தின் மகிமையை அச்சத்துடன் புலப்படுத்துகின்றது .
இக்கோயிலில் ஒவ்வொரு நாளும் மூன்றுகால பூசைகள் கிரமமாக நடைபெறுகின்றன . விஷேட தினங்களில் அவற்றுக்குரிய பூசைகளுஞ் செய்யப்படுகின்றன . இங்கு மகோற்சவம் ஆனிமாதத்தில் வருகின்ற அமாவாசையோடு ஆரம்பித்து பதினாறு நாட்களுக்கு நடைபெறும் . பதின்மூன்றாம் நாள் நடைபெறும் வேட்டைத் திருவிழா மிகவும் சிறப்பானது . இது மட்டுமன்றி தீராத நோய்களாற் பீடிக்கப்பட்டவர்கள் தம் நோய் தீருவதற்காக வேட்டைத் திருவிழா அன்று வேடனாக வருவதாக நேர்த்திக்கடன் செய்வார்கள் . இவர்கள் வாகைமரக் குழைகளாற் குடையும் வாகைக் குழையால் அல்லது தென்னோலையால் செய்த தொப்பியும் அணிந்து உடல் முழுவதும் கரிபூசி வேடர்கள் போலக் கோலஞ் செய்வார்கள் . தடி ஒன்றின் நுனியிற் குழை கட்டி அதனைக் கையில் வைத்துக்கொள்வார்கள் . இவ்வேடர்களுக்குத் தலைவன் ஒருவன் இருப்பான் . இது பரம்பரை பரம்பரையாகக் கிடைக்கின்ற ஒரு பதவியாகும் . தலைவன் தேன் நிறைந்த சுரைக் குடுவை ஒன்றினை அரையிலே கட்டியிருப்பான் . இந்தத் திருவிழாவுக்குச் சுவாமி மட்டுமே எழுந்தருளுவார் அவர் பெரிய வேடன் போல மேலே வீற்றிருக்க வேட்டுவப் படை அணி சூழ்ந்து வர திருவிழா பவனி வருதல் கண்கொள்ளாக் காட்சியாகும் . இவ்வாறு வீதி வலம் வந்து கோயில் வாயிலை அடையும்பொழுது அக்கோயிலின் இறைவி சுவாமியுடன் கோபித்துக் கொண்டு வாயிற் கதவைப் பூட்டிக் கொள்ளுவார் . அவ்வேளையில் கோயில் மணியகாரர் அவர்களுடைய பிணைக்கை விசாரித்துத் தீர்த்து வைக்கும் பாங்கில் நிகழச்சி ஒன்று அவ்விடத்தில் நடைபெறும் .
இவ்வாறாகப் பிணக்குத் தீர்க்கப்பட்டுச் சுவாமி கோயிலின் உள்ளே சென்ற பின்னர் வேடுவர் ஒருவர் பின் ஒருவராக அணிவகுத்து நிற்பர் . அவ்வேளையில் வேட்டுவத் தலைவனின் ஆணைக்கு அமைந்து அவர்கள் நிலத்தில் வீழ்ந்து வணங்குவர் . பின்னர் அவர்கள் கோயிலை வலம் வந்து தீர்த்தக் குளத்திற்குச் சென்று வேட்டுவ உடைகளைக் களைந்து தீர்த்தமாடுவர் . இதன்பின் அவர்களுடைய நோய் தீர்தல் ஒருகலை . இத்தகைய நோயாளர் விரதம் இருந்தே இந்த நேர்த்திக் கடனைச் செய்தல் நியதி . அதனால் நோய் தீரும் என்ற நம்பிக்கை வலுப்பெற்றுள்ளதனால் வேட்டைத் திருவிழாவில் வேடுவர்களாகப் பங்குபற்றுவோரின் தொகையும் அதிகரிக்கின்றது . மகோற்சவப் பிற்பகுதியில் பதினைந்தாம் நாள் தேர்த்திருவிழாவும் பதினாறாம் நாள்தீர்த்தத்திருவிழாவும் நடைபெறும் . இத்தகைய சிறப்புக்கள் வாய்ந்த ஒட்டுசுட்டான் தான்தோன்றீயீஸ்வரர் கோயில் வேட்டைத்திருவிழா அன்று இறைவனுக்கும் இறைவிக்கும் இடையிலானா பிணக்கை விசாரித்துத் தீர்த்துவைப்பது போன்று அமைந்த வசன கவிதை ஒன்று நூல் உருவில் இருக்கின்றது . கோயில் மணியகாரரே அவர்களுடைய வழக்கை விசாரிக்கும் நடுநிலையாளர் போன்ற பாவனையில் இக்கவிதை அன்று அவராலே படிக்கப்படும் . இறைவனும் இறைவியும் நேராக ஒருவர் மீது ஒருவர் குற்றம் கூறாமல் தம் குறையை மணியகாரருக்கு முறையிடுவது போன்று இக்கவிதைகள் அமைந்துள்ளன . இது வேறு எந்த கோயிலிலும் இல்லாத ஒரு நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது .
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

ஒட்டுசுட்டான்வேகாவனப் பரம்பொருளை நோக்கிய கோயில் பாட ல்

சிவ புராணம் 1 சிவ புராணம் 2 OM NAMA SHIVAYA
 
தவராசா.கேசவன் நெடுந்தீவு யாழ்ப்பாணம்