உடம்பே கோயில் - ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரா் ஆலயம்oddusuddansivankovil ஒட்டுசுட்டான் தாந்தோன்றீஸ்வரம்
Headlines News :
Home » » உடம்பே கோயில்

உடம்பே கோயில்

Written By Admin on Tuesday 18 September 2012 | 19:23


நாம் எல்லோருமே எதையாவது செய்து கொண்டு தான் இருக்கிறோம். தெரிந்து செய்வது கொஞ்சம், தெரியாமல் செய்வது ஏராளம். நினைத்தது நடந்தால் சந்தோஷம்; நினைத்தது நடக்காவிட்டாலோ, இமயமலையைத் தூக்கி இதயத்தில் வைத்ததைப் போல, மூச்சு முட்டுகிறது. ஆனால் இப்படிப்பட்ட மூச்சு முட்டல் இல்லாமல் நமது முன்னோர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்!

எப்படி?

அவர்கள் பாதையில் தெளிவாக இருந்தார்கள்; வழியைத் தேர்ந்தெடுத்து அதன் பலாபலன்களை அறிந்து பயணம் செய்தார்கள். நாமோ, ஒரு திரைப்படத்தில் சொன்னதைப் போல, கையால் வலது பக்கம் திரும்புவதற்கு சைகை காட்டிவிட்டு, வண்டியின் சிக்னல் விளக்கின் மூலம் இடதுபக்கம் திரும்பப் போவதாகக் குறிப்பு காட்டுகிறோம். கடைசியில் வண்டியை நேராக ஓட்டிக்கொண்டு போய்விடுகிறோம்.... அரைமணி நேர, ஒரு மணி நேரப் பயணத்திற்கே, போக்குவரத்து விதிமுறைகள் தெரிந்து அக்கம் பக்கம் பயணம் செய்பவர்களின் நிலையையும் அனுசரித்துப் பயணம் செய்தால்தான், நம் பயணம் நன்றாக அமைகிறது. ‘‘எனக்குப் போக்குவரத்து விதிமுறைகள் தெரியாது’’ என்று சொல்லித் தம்பிக்க முடியாது.

அதுபோலத்தான், வாழ்க்கைப் பயணத்திலும். எல்லோருமே, எதை எதையோ எதிர்பார்த்துத்தான் கோயிலுக்குப் போகிறோம். ஆனால் அங்கு உள்ளவற்றைப் பற்றி சரியாகத் தெரிந்து கொண்டிருக்கின்றோமா? ஆன்மிகம் பலன் மூலமாகத் தற்போது தெரிந்து கொள்ளத் தொடங்கி இருக்கிறோம் என்று தைரியமாகச் சொல்ல முடிகிறது. அந்த வகையில், இப்போது, இரண்டு பெரும் கோயில்களைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

சைவத்தில்-கோயில் என்று பொதுவாகச் சொன்னால், அது சிதம்பரத்தை மட்டுமே குறிக்கும். அதே போல வைணவத்தில் கோயில் என்று பொதுவாகச் சொன்னால் அது ஸ்ரீரங்கத்தை மட்டுமே குறிக்கும். இந்த இரண்டு கோயில்களின் அமைப்பைப் பற்றித் தெரிந்து கொண்டாலே போதும். முன்னோர்களின் சிந்தனையை எண்ணி நாம் பிரமிப்போம். தயவு செய்து, ஆலயங்களைப் பார்க்கும்போது அவை ஏதோ கல் மண் ஆகியவற்றால் ஆனது என்று எண்ண வேண்டாம். உலக வரைபடத்தைப் பார்க்கும்போது அது ஒரு சாதாரண தாள் (பேப்பர்), குறுக்கும் நெடுக்குமாக ஏதோ கோடுகள் போட்டிருக்கிறார்கள் என்றா நினைக்கிறோம்? அதை உலகமாகவே, அந்தந்த நாடுகளாகவே நினைத்துப் பார்க்கிறோம் அல்லவா? அது போலத்தான் கோயில்களும்.

சாதாரணமாகப் பெருங்கோயில்களில் கர்ப்பகிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், ஸ்நான மண்டபம், அலங்கார மண்டபம், சபா மண்டபம் என ஆறு பகுதிகள் இருக்கும். அந்த ஆறு பகுதிகளும், நம் உடம்பில் உள்ள மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை எனும் ஆறு ஆதார கமலங்களைக் குறிக்கும். வாருங்கள்! சிதம்பர உண்மையை ஆழ்ந்து அனுபவிக்கலாம்.

சிதம்பரம் கோயிலில், விமானத்தின் மேலே ஒன்பது கலசங்கள் உள்ளன. விமானத்தில் 62 மரங்கள் இருக்கின்றன. அவற்றின் மீது 21600 செப்பு ஓடுகளைப் பதித்திருக்கிறார்கள். அந்த ஓடுகளை 72000 ஆணிகளால் அடித்து அழுத்தமாகப் பிணைத்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை, நன்றாக மனதில் பதிய வைத்துக் கொண்டு வாருங்கள்! உடல் கூறுகளைப் பற்றிய முன்னோர்களின் விஞ்ஞான அறிவாற்றலை எண்ணி வியக்கலாம்.

விமானத்தின் மேலே இருக்கும் 9 கலசங்கள் வாமை, ஜேஷ்டை, ரௌத்ரீ, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்ரதமனி, சர்வபூத தமனி, மனோன்மணி ஆகிய சக்திகளைக் குறிக்கும். இவர்களை நவ சக்திகள் என்பார்கள். இதையே தீப்தை, சூக்ஷ்மை, ருஜை, பத்ரை, விபூத்யை, விமலை, அமோகை, வித்யுதை, சர்வதோமுக்யை என வேறு பெயர்களிலும் குறிப்பிடுவார்கள். இந்த 9 சக்திகளும் விளக்கு ஜ்வாலை போல நிறம் கொண்டவர்கள். ஒரு கையில் தாமரையையும் மறு கையில் சாமரத்தையும் ஏந்தி அலங்காரத் திருமேனியர்களாகத் திகழ்பவர்கள்.

விமானத்தில் உள்ள 64 கை மரங்கள் 64 கலைகளைக் குறிக்கின்றன. அதில் உள்ள 21600 செப்பு ஓடுகள் ஒவ்வொரு நாளும் நாம் விடும் மூச்சு எண்ணிக்கையைக் குறிக்கின்றன. அதில் உள்ள 72000 மூச்சுக்காற்று உலாவுவதற்கு ஆதாரமாக இருக்கும் 72000 நாடிகளைக் குறிக்கின்றன.
மூச்சுக்காற்றின் அளவு, நாடிகளின் கணக்கு எனத் துல்லியமாகச் சொன்ன நமது முன்னோர்கள், இதற்கு மேலும் சொல்லி இருப்பதைப் பார்த்தால், பெரும் ஆச்சரியமாக இருக்கும்.

சாதாரணமாக மனிதனுடைய இதயம், உடம்பின் நடுவில் சற்று இடப்புறமாக விலகி இருக்கும். அதை உணர்த்துவதைப் போல சிதம்பரம் கோயிலிலும் ஆலயத்தின் சரிபாதிக்குச் சற்று இடப்புறமாகக் கர்ப்பகிரகம் அமைந்துள்ளது. இதயத்திற்கு ரத்தம் போகும் வழி நேராக இருக்காது; பக்கவாட்டில்தான் இருக்கும். அதை அறிவுறுத்து முகமாக சிதம்பரத்திலும் கருவறையின் பக்க வாட்டிலேயே வழிகள் அமைந்துள்ளன.

இப்படிச் சிதம்பரம் கோயிலின் மூலம் ஓர் அற்புதமான வழியைக் காட்டியிருக்கிறார்கள் நமது முன்னோர்கள். அதாவது நமது உடம்பாகிய கோயிலில் இறைவன் வசிக்கிறார். நமது உள்ளத்தில் ஆண்டவன் நடனம் புரிந்து கொண்டிருக்கிறார் என்பதை சிதம்பரமும் நடராஜப்பெருமானும் நமக்கு உணர்த்துகின்றனர்.
ஸ்ரீரங்கத்தைப் பற்றி ஒரு சிறிய குறிப்பு: காவேரி-கொள்ளிடம் என்னும் இரண்டு நதிகளுக்கு நடுவில் ஏழு பிராகாரங்கள் சுற்றி இருக்கின்றன. அந்த ஏழு மதில்களுக்கு உள்ளாக, பாம்பணை மேல் ஸ்ரீரங்கநாதன் எழுந்தருளியிருக்கிறார்.

இதன் உள்ளார்ந்த தத்துவம் என்ன?

ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். காவேரி-கொள்ளிடம் என்னும் இரண்டு நதிகளுக்கு நடுவில் ஸ்ரீரங்கம் உள்ளது. இது மனித உடம்பில் உள்ள இடைகலை, பிங்கலை என்னும் இரண்டு நாடிகளுக்கு நடுவில் இறைவன் கோயில் கொண்ட இடம் உள்ளது என்று குறிக்கிறது. அடுத்து ஏழு பிராகாரங்கள். அவை எல்லாம் ஏதோ கல்லாலும் மண்ணாலும் கட்டப்பட்டவை என்று எண்ணி ஏமாந்து போகக்கூடாது. அந்த ஏழும் சப்த(7)தாதுக்களைக் குறிக்கின்றன. மஜ்ஜை, ரத்தம், எலும்பு, தோல், இறைச்சி, மூளை, சுக்கிலம் போன்ற ஏழு தாதுக்களும் இதயத்தைச் சுற்றி அமைந்திருப்பதைப் போல, ஸ்ரீரங்கநாதரைச் சுற்றி ஏழு மதில்களும் அமைந்துள்ளன.

அவற்றிற்கு நடுவில் பாம்பணை மேல் பகவான் எழுந்தருளி இருக்கிறார் என்பது, பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன் என்னும் பஞ்சப் பிராண விருத்திகளாகிய படங்களைக் கொண்ட நிர்மலமான பிராணவாயு என்னும் பாம்பணையில் சயனித்தபடி விபீஷணன் என்னும் ஜீவனுக்குக் காட்சி அளித்து அருள்புரிகிறார் இறைவன் என்பதைக் குறிக்கும்.

ஸ்ரீரங்க க்ஷேத்திர மகிமையும் அதன் உள்ளார்ந்த தத்துவங்களும் அள்ள அள்ளக்குறையாதவை. நாம் பார்த்தது ஒரு சிலவே. ஆகவே முன்னோர்கள் எல்லாம் ஏதோ கோயில்களைக் கட்டி இருக்கிறார்கள் என்று அலட்சியப்படுத்தாமல் அவற்றின் உண்மை உணர்ந்து வழிபாட்டைச் செய்தால் வாட்டமில்லா வாழ்வை அடையலாம் என்பதில் சந்தேகமே இல்லை.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

ஒட்டுசுட்டான்வேகாவனப் பரம்பொருளை நோக்கிய கோயில் பாட ல்

சிவ புராணம் 1 சிவ புராணம் 2 OM NAMA SHIVAYA
 
தவராசா.கேசவன் நெடுந்தீவு யாழ்ப்பாணம்