பெருமாளிடம் பேசியவர் - ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரா் ஆலயம்oddusuddansivankovil ஒட்டுசுட்டான் தாந்தோன்றீஸ்வரம்
Headlines News :
Home » » பெருமாளிடம் பேசியவர்

பெருமாளிடம் பேசியவர்

Written By Admin on Tuesday 18 September 2012 | 19:13

மானுஜரின் வரலாற்றோடு தொடர்புடையவர் திருக்கச்சி நம்பிகள். கஜேந்திர தாசர் என்பது அவருடைய இயற்பெயர். பூவிருந்தவல்லியைச் சேர்ந்த வைசியர்
குலத்தவரான கஜேந்திரதாசர், ஸ்ரீபெரும்புதூர் வேதியரான கேசவ சோமயாஜியுடன் (ராமானுஜரின் தந்தை) தோழமை கொண்டிருந்தார். காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் கஜேந்திரதாசர் ஆலவட்டம் வீசும் தொண்டாற்றி வந்தார். அதாவது, பெருமாளுக்கு விசிறி வீசும் பணியை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்து வந்தார். காஞ்சியில் பணியாற்றிய அத்தொண்டரை, ‘திருக்கச்சி நம்பிகள்’ என்று அழைத்தனர்.

தமது தந்தையின் நண்பர் என்ற முறையிலும் பரமபாகவதர் என்ற முறையிலும் ராமானுஜர் திருக்கச்சி நம்பிகளிடம் பெரும்பக்தி கொண்டிருந்தார். பெருமாளின்
அருகில் இருந்து ஆலவட்டம் வீசும் தொண்டை ஈடுபாட்டுடன் செய்து வந்த நம்பிகளிடம் பெருமாள் அடிக்கடி நேரில் பேசுவது வழக்கம்! அதனை அறிந்த திருமாலடியார் ஒருவர், திருக்கச்சி நம்பிகளை அணுகி, தமக்கு வைகுண்டம் கிடைக்குமா என்று பெருமாளிடம் கேட்டுக் கூற வேண்டினார். திருக்கச்சி நம்பிகளும் அந்த அடியவரின் கோரிக்கையைப் பெருமாளிடம் கூறினார்.

பெருமாளும் சிறந்த திருமாலடியாராகிய அந்த பக்தருக்கு வைகுண்டம் கிடைக்கும் என்று நம்பியிடம் உறுதியாகக் கூறினார். பெருமாள் கூறியதைத் திருக்கச்சி நம்பிகள் அந்த அடியவரிடம் தெரிவித்தார். அவன் உரைக்கப் பெற்றேனோ திருக்கச்சியார் போலே? என்றாள் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை. அதாவது, குறிப்பிட்ட அந்தத் திருமாலடியாருக்கு, ‘வைகுண்டம் கிடைக்கும்’ என்று பெருமாள் நேரில் உரைக்கக் கேட்ட திருக்கச்சி நம்பியின் பேறு தனக்குக் கிடைக்கவில்லையே என்று ஏங்குகிறாள், பெண்பிள்ளை.

மேனியில் புகுந்த மேலோன்

சோழ நாட்டு உறையூரில் கார்த்திகை மாத ரோகிணி நட்சத்திரத்தில் திருப்பாணாழ்வார் திரு அவதாரம் செய்தார். யாழிசைக்கும் பாணர் குலத்தில் வளர்ந்தார். அதனால், இவரைத் திருப்பாணாழ்வார் என்று அழைத்தனர். தனது யாழிசையைப் பெருமாளுக்கே அர்ப்பணித்தார். திருவரங்கத்துப் பெருமாள் மீது பக்தி
மேலிட்டது. காலையில் எழுந்து, காவிரியில் நீராடி, திருவரங்கன் சன்னிதானத்தைப் பார்த்தவாறு உள்ளம் உருகி யாழிசைப்பார். அதனை அரங்கன் விரும்பிச்
செவிமடுப்பான். முதலில் பாணரது பக்தியை உணராத பக்தர்கள் அவரைக் கல்லால் அடித்துத் துன்புறுத்தினர். கல்லடியால் உதிரம் பெருக்கெடுத்த நிலையிலும் உள்ளன்போடு அரங்கனுக்கு நாதாபிஷேகம் செய்தார் திருப்பாணாழ்வார்.

லோகசாரங்கர் என்ற தலைமைத் தொண்டரும் மற்றவர்களும் அரங்கன் சந்நதியைத் திறந்தனர். அப்போது, திருவரங்கனின் நெற்றியிலிருந்து ரத்தம்
பெருக்கெடுப்பதைக் கண்டு உள்ளம் பதைபதைத்தனர். அன்றிரவு லோகசாரங்கரின் கனவில் பெருமாள் தோன்றினார். ‘‘எமக்கு நல்லன்பனான பாணரை இழிவாகக் கருதாமல் உமது தோள்களில் எழுந்தருளப் பண்ணி, எம்முன் அழைத்து வாரும்!’’ என்று பெருமாள் கட்டளையிட்டார். ‘‘பெருமாளைச் சுமக்கும் கருடாழ்வாரின் பேறு எனக்கும் கிட்டியது!’’ என்றபடி, திருப்பாணாழ்வாரைத் தமது தோளில் அமரச் செய்து அரங்கன் திருமுன் கொணர்ந்து நிறுத்தினார் லோக சாரங்கர்.

அரங்கநாதனின் அழியா அழகை அடிமுதல் முடிவரை கண்டு நெக்குருகி நின்றார். திருப்பாணாழ்வார் ‘அமலனாதிப்பிரான்...’ என்று தொடங்கும் பாசுரத்தைப் பாடினார். திருவரங்கன் தனது திருமேனியில் திருப்பாணாழ்வாரை ஐக்கியப்படுத்திக் கொண்டு, அவர் பெருமையை மேலும் உயர்த்தினான். அவன் திருமேனி ஆனேனோ திருப்பாணரைப் போலே? என்று திருக்கோளூர்ப் பெண்பிள்ளை பாடுகிறாள். அரங்கன் திருமேனியுள் ஒன்றான (ஐக்கியமான) திருப்பாணாழ்வாரைப்போல, தன்னால் எதுவும் செய்ய இயலவில்லையே என்று அவள் ஏங்குகிறாள்.

வசிஷ்டர் வாக்கு

தசரதன் அரசவைக்கு வந்த விஸ்வாமித்திரர், தன் வேள்வியைக் காத்திட ராமனைத் தன்னுடன் அனுப்பி வைக்க வேண்டினார். ராமன் சிறுவன் என்பதால், அவனைக் காட்டிற்கு அனுப்பத் தயங்கினான் தசரதன். ராமனின் உண்மையான பராக்கிரமத்தை ‘நான் அறிவேன்’ (அஹம் வேத்மி) என்று கூறினார் விஸ்வாமித்திரர். மஹா தேஜஸ்வியான வசிஷ்டரும் அவரைப் போன்ற முனிவர்களும் ராமனை அறிவார்கள் என்று விஸ்வாமித்திரர் மேலும் விளக்கினார். அத்துடன், வசிஷ்டரும் ஒரு முனிவர் என்பதால், தனக்குச் சாதகமாகப் பேசுவார் என்று எண்ணலாகாது என்றும் கூறிய விஸ்வாமித்திரர், முனிவர்கள் பொய்யுரைத்தால், அவர்களுடைய தவத்தின் ஆற்றல் குறைந்துவிடும் என்ற உண்மையையும் எடுத்துக் கூறினார்.

இறுதியாக வசிஷ்டர் ராமனையும் லட்சுமணனையும் முனிவருடன் அனுப்பி வைக்க அறிவுறுத்தினார். ராமன் விஸ்வாமித்திரர் போன்ற முனிவர்களுடன் செல்வதால் பல நன்மைகளையும் அடைவான் என்றார். சீதா கல்யாணம் என்ற நன்மையும் அவற்றுள் ஒன்று. அனுப்பி வையும் என்றேனோ வசிட்டரைப் போலே? -என்று அந்த சம்பவத்தை மிகச் சுருக்கமாகக் குறிப்பிட்டாள் திருக்கோளூர்ப் பெண்பிள்ளை.

பருத்தியூர் சந்தானராமன்
Share this article :

1 comment:

  1. திருக்கச்சி நம்பி தீண்டத்தகாதவர் ; பறையர் குலத்தவர் என்பது உண்மை வரலாறு ; அவரை உரு மாற்றம் செய்து சாதி மாற்றி வணங்குவதை விட அத சாதியின் பெயரிலேயே வணங்கலாம்

    ReplyDelete

ஒட்டுசுட்டான்வேகாவனப் பரம்பொருளை நோக்கிய கோயில் பாட ல்

சிவ புராணம் 1 சிவ புராணம் 2 OM NAMA SHIVAYA
 
தவராசா.கேசவன் நெடுந்தீவு யாழ்ப்பாணம்