அண்ணன் என்னடா, தம்பி என்னடா... - ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரா் ஆலயம்oddusuddansivankovil ஒட்டுசுட்டான் தாந்தோன்றீஸ்வரம்
Headlines News :
Home » » அண்ணன் என்னடா, தம்பி என்னடா...

அண்ணன் என்னடா, தம்பி என்னடா...

Written By Admin on Tuesday 18 September 2012 | 19:42

கண்ணனைப் பற்றித்தான் நம் மண்ணில்
எத்தனை எத்தனை வசீகரக் கதைகள். எனக்கும் என் பெண்ணிற்கும் மிகப் பிடித்தது ஒரு
சிறுவனுக்கு கண்ணன் அண்ணனாக வந்த கதை.

சிறுவன் ஹரி, ஏழை அம்மாவோடு காட்டின் ஓரமாக வசித்து வந்தான். தினமும் பள்ளிக்குப்போக காட்டை கடக்க வேண்டும். சின்னஞ் சிறுவன் அல்லவா? ஹரிக்கு ஒரே பயம். மற்ற சிறுவர்கள் எல்லாம் பணக்காரர்கள். வண்டி வைத்துக் கொள்வார்கள். ஹரியின் அம்மாவிற்கு வசதி கிடையாது. சிறுவனின் பயத்தைப் போக்க அம்மா சொல்லிக் கொடுத்தாள்: ‘‘உனக்கு ஒரு அண்ணன் இருக்கிறான். அவன் பெயர் கோபால். ரொம்ப பலசாலி. தைரியசாலி. நீ காட்டு வழியே போகும்போது அவன் பெயரைச் சொல்லிக்கொண்டு போ. பயமே தெரியாது.’’ அம்மா கண்ணனையே தன் பையனுக்கு அண்ணனாகவும் தனக்கு மூத்த மகனாயும் வரித்து விட்டாள்.

ஹரி அப்படியே நம்பி தன் அண்ணனின் பெயரைச் சொல்லிக் கத்தினான். காட்டு வெளியில், மின்னும் கண்களுடன், சின்னஞ்சிறு மயிற்பீலி அசைய, புல்லாங்குழலுடன் நந்தகோபாலன் தன் தம்பிக்குத் துணையாக வந்துவிட்டான். ஒவ்வொரு நாளும் காட்டு வழியில், கள்ளர் பயமில்லாமல், சிறுவனோடு துணை வந்தான், ஹரி. வீட்டில் வந்து அண்ணனைப் பார்த்த தகவலைச் சொன்னபோது, சிறுவனின் மித மிஞ்சிய கற்பனையை நினைத்துச் சிரித்தாள் அம்மா. பள்ளியில் ஒருநாள் விருந்து. எல்லா சிறுவர்களும் சுவையும் மதிப்பும் மிகுந்த உணவுப் பொருளைக் கொண்டு வர வேண்டும். ஹரியின் ஏழைத்தாய் என்ன செய்வாள்? ‘‘நீ உன் அண்ணனையே கேள்’’ என்று சொல்லி விட்டாள். ஹரியும் கேட்க, அண்ணன் ஒரு சிறு கிண்ணத்தில் மிகச் சுவையான தயிரைக் கொண்டுவந்து தம்பியிடம் தந்தான். ‘‘போயும் போயும் தயிரா கொண்டு வந்தாய்?’’ என்று மிரட்டிய ஆசிரியை, அந்தத் தயிரை சுவைத்துப் பார்த்து அரண்டு போய்விட்டார். அத்தனை அபூர்வமான சுவை! ‘‘இதை யார் கொடுத்தது?’’ என்று எல்லாரும் ஹரியைத் துளைத்தெடுக்க, தன் அண்ணனைப் பற்றிச் சொன்னான் ஹரி. கள்ளங்கபடமற்ற சிறுவனின் பக்திக்காக கண்ணனே அண்ணனாக வந்ததை நினைத்து அந்தக் கிராமமே வியந்து நின்றது. குஜராத்தில் துவாரகாநாதனாக கண்ணன் காட்சி தரும் இடத்தில் வழங்கும் கதை இது.

இறைவனைக் காதலனாக நினைக்கும் சன்மார்க்கம், ஆண்டவனாக நினைக்கும் தாச மார்க்கம், தாயாக-தந்தையாக நினைக்கும் சத்புத்ர மார்க்கம், நண்பனாக நினைக்கும் சக மார்க்கம் என்று இறைவனை வழிபடும் பல மார்க்கங்கள் உண்டு. இவை எதையும்விட இறைவனை அண்ணனாக நினைக்கும் அழகு உருக வைக்கிறது. ‘‘என் வடபழநி அண்ணா!’’ என்று வடபழநியில் இருக்கும் முருகனை வசீகரமாக அழைக்கிறார் சிவநேசர். அமரர் தேவனின் ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’ என்னும் கதையில் கதாநாயகி ஜெயலட்சுமி ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தன் கணவனை விடுவிக்க வள்ளியையும் தேவசேனையையும் ‘‘அண்ணிகளே, என்னைக் காப்பாற்றக்கூடாதா?’’ என்று வேண்டுவதாய் தேவன் எழுதுகிறார். அவர் மிகச் சிறந்த முருக பக்தர்.

அண்ணன் என்னும் உறவு பெரும்பாலும் இரு அதீத எல்லைகளில் நிற்பது. மிகத் தீவிரமான மரியாதை அல்லது கடும் வெறுப்பு என்னும் இரண்டே நிலைகள்தான் இதற்கு உண்டு. உலகின் முதல் பெற்றோரான ஆதாம்-ஏவாளின் இரு மகன்களான காயீன் மற்றும் ஆபேல் இருவரின் கடும் பகையை பைபிள் சொல்கிறது. ஆபேல், காயீனால் கொல்லப்படுகிறான். உலகின் முதல் கொலை! சகோதரர்களின் பகையால் வந்தது! இந்திய நீதிமன்றங்களில் அண்ணன்-தம்பியருக்கு இடையில் இருக்கும் வழக்குகளைத் தள்ளுபடி செய்தால் பாதி வழக்குகள் குறைந்துவிடும். திருமணம் ஆகும்வரை சகோதரிகளுக்குள் சண்டைகள் மிகும். திருமணம் ஆனபின்பு அக்கா-தங்கை பாசம் அதிகமாகும். ஆனால் திருமணத்திற்குப் பிறகு அண்ணன்-தம்பி உறவுக்கு ஏதோ ஆகிவிடுகிறது. இளவயதில் அவர்களுக்குள் இருந்த நெருக்கம், உரிமை, சேர்ந்து ஆடிய கிரிக்கெட்... எல்லாம் என்ன ஆகிறது? விலகி விலகிச் செல்லும் விரிசல் கண்ட உறவுப் பாலத்தை இணைக்கும் கயிற்றை முதலில்
வெட்டியது யார்?

தாஸ்தாவஸ்கி, உலகின் மிகச் சிறந்த எழுத்தாளராக மதிக்கப்படுகிறவர். ரஷ்யர். அவரது வாழ்வில் ஒரு நம்ப முடியாத நிகழ்ச்சி நடந்தது. 28 வயதில் ராஜ துரோகக் குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. அவருடைய முறை வருவதற்கு ஒரு நிமிடம் முன்பு அந்தத் தண்டனை நிறுத்தப்பட்டு நாலு வருட சிறை தண்டனையாக மாற்றப்பட்டது. அந்தச் சம்பவத்தை குறிப்பிட்டு தம் தம்பிக்கு அவர் எழுதிய கடிதம் மிகப் பிரசித்தம்: ‘தண்டனைக்காக எங்களை மைதானத்திற்கு அழைத்துப் போனார்கள். மொத்தம் ஆறு பேர். கொல்வதற்கு வசதியாக மூன்று மூன்று பேர்களாக எங்களை நிறுத்தினார்கள். சிலுவையை முத்தமிட வைத்தார்கள். இன்னும் சரியாக ஒரு நிமிடம் இருந்தது. அந்தக் கடைசி நிமிடத்தில் நான் உன்னை நினைத்தேன். சகோதரனே, உன்னை மட்டுமே நினைத்தேன். அப்போது ஊதுகுழல் ஒலித்தது. மாட்சிமை பொருந்திய மன்னர் எங்கள் மரண தண்டனையை நாலுவருட சிறைத் தண்டனையாகக் குறைத்து விட்டார்.’

ஒரு 28 வயது வாலிபன் மரணத்தை முத்தமிடும் இறுதிக் கணத்தில் தன் சகோதரனை நினைத்து நேசத்தின் அழகைச் சொல்லும் அந்தக் கடிதம், உலக இலக்கியங்களில் ஒன்றாகி விட்டது.
நாளை பட்டாபிஷேகம் என்று ஊரெல்லாம் கொண்டாட்டமான நேரத்தில் சிற்றன்னை, ‘‘பரதனுக்குத்தான் பட்டாபிஷேகம். நீ காட்டுக்குப் போக வேண்டும் என தந்தை சொன்னார்’’ என்று சொன்ன கைகேயியிடம், ‘‘என் பின்னவன் பெற்ற செல்வம் அடியினேன் பெற்றதன்றோ’’ என்று ராமன் கேட்டானாம். அண்ணனைத் தம்பியும் தம்பியை அண்ணனும் குத்திக்கொன்ற ரத்தக்கறை படிந்த சரித்திரப் பக்கங்களின் தொடர்ச்சி இன்னமும் நம்மிடையே வளர்ந்தபடியே இருக்கிறது. ஆனால், சக-உதரன், சகோதரன் என்ற உறவின் புனிதம் தலைமுறைகள் தாண்டி நம் கலாசாரத்தின் கோபுரக்கலசமாக மிளிர்ந்தபடியே இருக்கும். ஏனென்றால் நம் தேசத்தின் கலாசாரத் தலைவன் ராமன் போட்டுத் தந்த பாதை  இது.

தன்னை வெட்ட ஒரு வெறியில் ஓடிவரும் ஜெகவீரராம பாண்டியன் என்ற தம்பியிடம், மன்னனான அண்ணன் அதிவீரராம பாண்டியன் சொல்லும் பாடல் இது:
செஞ்சுடரோன் மைந்தனையும் தென்னிலங்கை வேந்தனையும்
பஞ்சவரில் பார்த்தனையும் பாராதே -
விஞ்சி விரதமே பூண்டிந்த மேதினியை ஆண்ட
பரதனையும் ராமனையும் பார்.
‘அண்ணனைக் கொன்ற சுக்ரீவனையும் தம்பியைத் துரத்திய ராவணனையும் சூதாடிய அண்ணனின் கையை எரிக்கக் கோரிய அர்ஜுனனையும் பார்க்காதே. ராமனும் பரதனுமே சகோதரர்களுக்கான உதாரணப் புருஷர்கள்’ என்ற பாடலைக் கேட்டு தம்பி ஜெகவீர ராம பாண்டியன் தன் முடிவை
மாற்றினானாம்.

சோமாலியாவின் கடும் பட்டினியில் ஒற்றி உலர்ந்த, பசி என்ற ஒரு உணர்வு தவிர எதுவும் தெரிய நியாயமில்லாத, குழந்தைகளைப் படம் எடுக்கப் போனார் ஒரு பத்திரிகையாளர். ஒளியற்ற கண்களுடன், சவம் போலக் கிடந்த தன் தம்பியைத் தூக்கிக் கொண்டு நடந்த எலும்புக்கூடு போன்ற அண்ணனைப் படம் எடுத்துவிட்டு கதறி அழுதபடி தன் நாட்டில் இருந்த தன் தம்பியை தொலைபேசியில் அழைத்துச் சொன்னார், ‘‘நம் உறவின் உயர்வை இன்றுதான் அறிந்து கொண்டேன்’’ மரணத்தின் கதவைத் தட்டும் தம்பியை காப்பாற்றப் போராடும் ஆப்பிரிக்கச் சிறுவனைப் போன்ற அன்பான அண்ணன்கள் இன்னமும் இருந்துகொண்டுதானே இருக்கிறார்கள்!
(சிறகுகள் விரியும்)
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

ஒட்டுசுட்டான்வேகாவனப் பரம்பொருளை நோக்கிய கோயில் பாட ல்

சிவ புராணம் 1 சிவ புராணம் 2 OM NAMA SHIVAYA
 
தவராசா.கேசவன் நெடுந்தீவு யாழ்ப்பாணம்