திருந்தி வந்தார் திருமழிசை ஆழ்வார் - ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரா் ஆலயம்oddusuddansivankovil ஒட்டுசுட்டான் தாந்தோன்றீஸ்வரம்
Headlines News :
Home » » திருந்தி வந்தார் திருமழிசை ஆழ்வார்

திருந்தி வந்தார் திருமழிசை ஆழ்வார்

Written By Admin on Tuesday 18 September 2012 | 19:17


துவாபர யுகத்தில், 8,62,900ம் ஆண்டான சித்தார்த்தியில் அவதரித்தார் ஒரு மகான். அதற்கு முந்தைய சித்தார்த்தி வருடத்தில், அத்ரி, பிருகு, வசிஷ்டர், பார்க்கவர், ஆங்கிரஸ், புலஸ்தியர், குத்ஸர் முதலிய பிரம்ம ரிஷிகள் சத்ய லோகத்திற்குச் சென்றனர். சத்ய லோகம் என்பது படைக்கும் கடவுளான பிரம்மாவின் உலகமாகும்.

கலைமகள் வீணையை மீட்டி வேத கானம் இசைத்துக்கொண்டிருந்தாள். நாரதர், பிரம்மாவின் கடைசி குமாரர் ஆவார். அவரும் பகவான் மீது கானம் பாடி பக்தியில் திளைத்திருந்தார். இவருடைய சீடர்களான தேவலர், அஸிதர் என்போரும் பரந்தாமனைப் பாடி உலகையே மறந்திருந்தனர். அதுமட்டுமா, வால்மீகி முனிவர் ராமாயணத்தை பாடிப்பாடி தான் உருகியது மட்டுமல்லாமல், பிரம்மாவையும் உருகச் செய்து கொண்டிருந்தார். சத்யலோகம் இப்படி பகவான் ஸ்மர்ணையில் ஆழ்ந்திருந்த போது, ஒரு கட்டத்தில், பிரம்மா வந்திருந்த ரிஷிகளை வரவேற்றார். தான் பெற்ற பிள்ளைகளைப்போல் பாவித்து அவர்களை அன்புடன் உபசரித்தார். அவர்கள் ஒன்றுகூடி வந்ததன் காரணத்தை வினவினார்.

உலகின் தலைவனான நான்முகனின் அடிதொழுது தாளும் தடக்கையும் கூப்பி, “உலகில் தவம் இயற்றுவதற்கு தலை சிறந்த இடம் எது?’’ என ரிஷிபுங்கவர்கள் கேட்டார்கள். உடனே பிரம்மா, தேவதச்சன் என்ற புகழுக்குரிய விஸ்வகர்மாவை வரவழைத்து ஒரு துலாக்கோலின் தட்டில் பூமியின் எல்லா பாகங்களையும் வைக்கச் சொன்னார். மற்றொரு தட்டில் திருமழிசை என்னும் தலத்தையும் வைக்கச் சொன்னார். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. திருமழிசை வைத்த தட்டு கனம் மிகுதியாலே தாழ்ந்து நிற்க, பூமியின் பிற பாகங்கள் வைக்கப்பட்டிருந்த தட்டு லேசாகி மேலே நின்றது. பூலகில் திருமழிசையே தலைசிறந்த தலம் என்று உணர்ந்த முனிசிரேஷ்டர்கள், நான்முகனிடம் விடை பெற்று, திருமழிசைக்குச் சென்றனர்.

அந்தத் தலத்தில் அப்படி என்னதான் விசேஷம்?


இந்த புண்ணிய தலத்தில்தான் துவாபர யுகம், சித்தார்த்தி என்ற 8,62,900ம் வருடத்தில் தை மாதம், கிருஷ்ண பக்ஷ பிரதமையில், மக நட்சத்திரத்தில், ஞாயிற்று கிழமையன்று பார்க்கவ மகரிஷிக்கு திருக்குமாரராக திருமழிசையாழ்வார் அவதரித்தார். இவர் பக்தியில் திளைத்ததால் பக்திசாரர் என்றும் பெயர் பெற்றார். இவரது அவதாரம் எப்படி நிகழ்ந்தது? மல்லிகை மணம் கமழ் தென்றல் எங்கும் மந்த மாருதமாக வீசிக் கொண்டிருந்தது. நெஞ்சு முழுக்க எம்பெருமானை நினைத்து முனிவர்கள் வேதமோதி தீர்க்க சத்ர யாகம் எனும் வேள்வியை செய்து கொண்டிருந்தார்கள். அந்த யாகத்தை பார்க்கவ ரிஷி தலைமையேற்று நடத்தினார்.

இந்திரன் கொஞ்சம் பயந்துதான் போனான். யாகத்தின் பலனாக தனது பதவி பறிபோய்விடுமோ என்று அஞ்சினான். உடனே, ரம்பை, மேனகை, ஊர்வசி, திலோத்தமை முதலான தேவலோகத்து நடன சுந்தரிகளை, பார்க்கவ ரிஷியின் தவத்தையும் யாகத்தையும் கெடுப்பதற்காக ஏவினான். அவர்கள் பலவாறு முயன்றும் எம்பெருமானின் திருவடித் தாமரைகளில் ஈடுபட்ட பார்க்கவ ரிஷியினுடைய மனதைத் தங்கள் பக்கம் திருப்ப இயலாமல் திகைத்தார்கள். அவர்களில் ஒருவளான கனகாங்கி (72 மேளகர்த்தா ராகங்களில் ஒன்றின் பெயரும் இதுதான்) மட்டும் வசீகரமாக பார்க்கவரை ஈர்த்துக் கொண்டிருந்தாள். காமத்தை வளர்க்கும் தென்றலையும் சந்திரனையும் துணை கொண்டாள். முனிவரின் முன் ஒயிலாக நாட்டியமாடினாள்.

பகவானின் சங்கல்பமும் இவர் மயங்க வேண்டுமென்று தான் இருந்தது. அதேபோல அந்த முனிவர் கனகாங்கியிடம் தம் மனதை பறிகொடுத்தார். அவளிடம் காமமுற்றார். யோகம் விட்டு போகம் விரும்பி சில காலம் தம்மை மறந்து அவள் வசப்பட்டார். காலக்கிரமத்தில் கருவுற்ற அவளது வயிற்றிலிருந்து சுதர்சனம் எனும் திருவாழியாழ்வானின் அம்சமாக தை மாதம் மக நட்சத்திரத்தன்று பிண்ட ரூபமாகக் குழந்தை பிறந்தது. இந்த காரணத்தினாலேயே அந்த குழந்தையை வெறுத்த கனகாங்கி, ஒரு பிரம்புப் புதரில் அதனை எறிந்து விட்டுத் தன்னுலகம் சென்றாள்.

பார்க்கவ முனிவரும் தன் தவறுக்கு வருந்தி மீண்டும் தன் நிலைக்கு வந்தார். மீண்டும் தவமும் யாகமும் புரியத் தொடங்கினார். இங்கு ஒரு விஷயத்தைத் தெளிவாக்க வேண்டும். சிலகாலம் கனகாங்கி என்பாளோடு முனிவர் வாழ்ந்தார் என்பது கனகாங்கி என்ற ராகத்தின் ஈர்ப்பில் அவர் திளைத்திருந்தார் என்றே கொள்ள வேண்டும். மேலும், இவரைப் போன்ற ரிஷிகள், மானுடர்களைப்போல ஆண், பெண் சேர்க்கை என்றில்லாமல், ஒரு பெண்ணுக்கு மானசீகமாகவே கர்ப்பம் வழங்க வல்லவர்கள். அதனால்தான் கனகாங்கி என்கிற ராகத்திற்குப் பிறந்தது பிண்ட ரூபமாக ஆனது.

பிரம்புப் புதரில் எறியப்பட்ட ரிஷி பிண்டம் விரைவிலேயே இறையருளால் ஆண் குழந்தையாக பரிணமித்தது. பசி, தாகத்தால் அழுதது. இதே திருமழிசை தலத்தில் கோயில் கொண்டருளும் ஜகந்நாதப் பெருமாள், பிராட்டியுடன் அங்கே எழுந்தருளி, குழந்தையை கடாட்சித்து அதன் பசி தாகத்தைத் தணிவித்தார். ஆராவமுதான தமது திருமேனியைக் காட்டி, குழந்தையைத் தேற்றி மறைந்தார். எம்பெருமானின் தரிசனத்தை உணர்ந்த குழந்தை, காட்சி தந்துவிட்டு மறைந்த பெருமாளை பார்க்க விரும்பியது. பிரிவாற்றாமையால் மீண்டும் அதிகமாக அழத் தொடங்கியது.

அந்த சமயம் காட்டில் பிரம்பறுக்க வந்த திருவாளன் என்பவன், குழந்தையை கண்டு மகிழ்ந்தான். தன் இல்லத்திற்கு கொண்டு சென்றான். குழந்தை பாக்கியமே இல்லாத தன் மனைவி பங்கயச் செல்வியிடம் கொடுத்தான். குழந்தையின் மீது உண்டான அன்பின் மிகுதியில் இவளது முலையிலிருந்து ஆச்சரியமாக பால் சுரந்தது. ஆனால் அக்குழந்தை அதனையும் பருகாமல் பசி தாகத்தை வென்று வளர்ந்தது. பால்யத்திலிருந்தே உலகப் பற்றற்று, பகவானின் குணங்களை நினைத்து நெஞ்சுருகி பரிசுத்தமான திருமேனியோடு அதிசயிக்கும்படி வளர்ந்தது. இவ்வுலகத்திற்கு சம்பந்தமில்லாத சரீரமோ என உலகத்தார் இவரை ஆச்சரியமாகப் பார்த்தனர்.

இவர் எந்த உணவுப் பொருளையும் தீண்டாமல், பகவானின் அருளை மட்டும் பருகினார். இப்படி இவரின் மகிமையைக் கேள்விப்பட்ட வயதான வேளாளர் ஒருவர் தினமும், தன் மனைவியோடு இவரைக் காண வருவார். வரும் போதெல்லாம் காய்ச்சிய பசும்பாலை கொண்டு வந்து பருகும்படி வேண்டுவார். வேறு எதையும் பருகாத அந்தக் குழந்தை, பகவானின் சங்கல்பத்தை உணர்ந்து, இவருடைய பக்திக்கு இணங்கி பாலை மட்டும் எடுத்துக் கொண்டது. தினமும் இவ்வாறு வேளாளர் தம்பதி அளித்த பாலைப் பருகியபடி இருந்த குழந்தை, அவர்களுக்கு அருள் செய்ய எண்ணியது. ஒருநாள் தான் உண்டு மீதியிருந்த பாலை, அந்த வேளாளரையும், அவர் மனைவியையும் உண்ணச் செய்தது.

அப்படி உண்ட அந்த சமயமே அந்த வேளாள தம்பதி இளமை கோலத்தை அடைந்தனர். குழந்தை இல்லாத அவர்களுக்கு குழந்தையும் பிறந்தது. இது தெய்வத்தின் அருள் என நினைத்து அக்குழந்தைக்கு கணிகண்ணன் எனப் பெயரிட்டு வளர்த்தனர். பிறகு சிலகாலம் கழித்து கணிகண்ணனை பார்க்கவரிடம் கொண்டு விட்டார்கள். அவரும் மனமகிழ்ந்து அவனை பாகவத சிஷ்யனாக மாற்றினார். பார்க்கவ குமாரர், ஏழு வயது வரையிலும் திருவாளன் இல்லத்தில் வளர்ந்த பிறகு, அஷ்டாங்க யோகம் பயின்று எம்பெருமானை அடைய பல தலங்களுக்குச் செல்ல தொடங்கினார்.  வேதத்தை ஒப்புக் கொள்ளாத சமயங்களும் வேதத்தை ஒப்புக் கொண்டாலும் அதற்கு மாற்றுப் பொருள் கூறும் மதங்களும் இருக்கக் கண்டார்.

எல்லாவற்றையும் ஊன்றி ஆராய்ந்து, அவற்றில் உள்ள குறைபாடுகளைக் கண்டு அவற்றிலிருந்து விலகி நின்றார். பிறகு, சைவ சமயத்தில் ஊன்றி அதனையும் ஆராயத் தொடங்கினார். அப்போதுதான் முதலாழ்வார்களில் மூன்றாமவரான பேயாழ்வார், பார்க்கவ குமாரரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவர் இருப்பிடம் வந்து சேர்ந்தார். அவரைச் சீர்திருத்தி சிறந்த பாகவதனாக, சிறந்த வைணவனாக மாற்ற எண்ணி அங்கேயே ஒரு ஆசிரமத்தை அமைத்துக் கொண்டார். பேயாழ்வார் சில வேடிக்கையான செயல்களைச் செய்தார். ஒருசில செடிகளை தலைகீழாக நட்டு ஓட்டைக் குடத்தை, அறுந்த தாம்புக் கயிற்றால் கட்டி கிணற்றிலிருந்து நீர் இறைத்து, செடிகளுக்கு நீர் இறைத்தார். இதைக் கண்ட பார்க்கவ குமாரர் பெரிதாகச் சிரித்து, ‘‘இந்த செயலைச் செய்யும் நீர், பித்தரோ?
பேயரோ’’ என பேயாழ்வாரை நோக்கிக் கேட்டார்.

‘‘நான் செய்யும் செயல் பித்தர் செயல் எனில் நீர் செய்வதும் பெரும் பித்தர் செயலன்றோ!’’ என பேயாழ்வாரும் ஏளனமாகக் கேட்டார். திருமழிசையார் ‘‘அது என்ன?’’ என்று கேட்க, பேயாழ்வார் விவரிக்கத் தொடங்கினார்.

‘‘உலகெலாம் படைத்து அதை அழிக்கும் செயலை செய்வதே முழுமுதற் கடவுள் ஸ்ரீமன் நாராயணன்தான் என்பது நான்கு வேதங்களிலும் வேதாந்தங்களிலும், ஆறு அங்கங்களிலும் மனு முதலான ஸ்ம்ருதிகளிலும் உள்ள வாக்கு. எல்லா ரிஷிகளாலும் கொண்டாடப்படும் ஸ்ரீமத் ராமாயணம், ஸ்ரீமத் மகாபாரதம், ஸ்ரீ விஷ்ணு புராணம் என்று சகல புராணங்களும் ஆயிரக்கணக்கான வேத வாக்கியங்களால் முழங்குகிறது. நீர் வேதத்தை ஒப்புக் கொள்ளாத பிற சமயங்களிலிருந்தும் தவறான அர்த்தம் கூறக்கூடிய சமயங்களில் சென்று இழிந்து அதன் மூலம் மோட்சம் பெற விரும்புவது பெரும் பித்தர் செயலன்றோ’’ என்று கேட்டவுடன் திருமழிசை திகைத்தார். பிறகு, இருவருக்கும் நீண்ட வாக்குவாதம் நடந்தது. அப்போது பேயாழ்வார் லட்சக்கணக்கில் வேதப் பிரமாணத்தை கூறி அதிலுள்ள நியாயங்களை காட்டிப் பேசி திருமழிசையாரை வெற்றி கொண்டார். திருமழிசையாருக்கு சிறந்த குருவாக பேயாழ்வார் ஆனார்.

மனம் திருந்தி நல்லதொரு பாதையில் செல்ல எண்ணிய திருமழிசையாருக்கு திருவிலச்சினை என்றழைக்கப்படும் சங்கு, சக்ர முத்திரைகளை இரண்டு தோள்களிலும் இட்டார். சில ரகசிய மந்திர அர்த்தங்களையும் உபதேசம் செய்தார். அதுமுதல் சிறந்த பாகவதராக, சிறந்த வைஷ்ணவராக மழிசையார் மாறினார். இதற்குப் பிறகுதான் இவரின் திருநாமம் திருமழிசை ஆழ்வார் என வழங்கப்பட்டது. இப்படி பரம வைஷ்ணவரான திருமழிசையார் தம்முடைய பாசுரத்தில் “சாக்கியங்கற்றோம், சமண் கற்றோம், சங்கரனார் ஆக்கிய ஆகம நூல் ஆராய்ந்தோம், பாக்கியத்தால், செங்கட்கரியானைச் சேர்ந்தோம். யாம் திதிலமே எங்கட்கரியதொன்றில்’’ என்று பாடுகிறார்.

கோமடம்  மாதவாச்சார்யார்
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

ஒட்டுசுட்டான்வேகாவனப் பரம்பொருளை நோக்கிய கோயில் பாட ல்

சிவ புராணம் 1 சிவ புராணம் 2 OM NAMA SHIVAYA
 
தவராசா.கேசவன் நெடுந்தீவு யாழ்ப்பாணம்